சென்னை தி.நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கட்டப்பட்ட மேம்பாலம் வரும் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட உள்ளது. சென்னை மாநகராட்சியால் கட்டப்பட்ட இந்த மேம்பாலம், தெற்கு உஸ்மான் சாலையை சிஐடி நகர் பிரதான சாலையுடன் இணைக்கும். இதன் மூலம், அப்பகுதியில் நிலவி வந்த நீண்டகால வாகன நெரிசல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மேம்பாலம் திறக்கப்பட்டால், தி.நகர் வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரிய நிம்மதி கிடைக்கும். சைதாப்பேட்டை, கிண்டி, அடையாறு, கோடம்பாக்கம், அண்ணாநகர், நுங்கம்பாக்கம் போன்ற பகுதிகளுக்கு செல்பவர்கள், முன்பு பல மணி நேரம் காத்திருந்த நிலையில், இனி சில நிமிடங்களிலேயே கடந்துவிடலாம்.
இந்த மேம்பாலம் காரணமாக சாலை போக்குவரத்துக் குறைவதோடு, அப்பகுதி மக்கள் தங்களின் பயண நேரம் வெகுவாக குறையும் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். சாலையோர ஆக்கிரமிப்புகளை தடுக்க காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்தால், போக்குவரத்து சீராக இருக்கும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.