தமிழர் பாரம்பரியத்தில் நடந்த ஒரு அதிசய திருமணம்!

Webdunia
புதன், 17 ஜூலை 2019 (20:34 IST)
பெரும்பாலும் திருமணம் என்பது ஒரு குடும்பத்தின் ஆடம்பரத்தை வெளிப்படும் விதமாகவே அமைந்துவிடுகிறது. ஆனால் வேப்பூர் தாலுக்கா கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அசோக்-அழகேஸ்வரி இணையரின் திருமணம் தமிழர் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் இருக்கின்றது. தங்கள் திருமணம் குறித்து இந்த தம்பதிகள் கூறியதாவது:
 
தற்சார்பு வாழ்வியல் முறை மருத்துவமும், பாரம்பரிய விவசாயத்தை ஊக்குவிப்ப்து போன்ற முன்னெடுப்புகளில் கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் இயங்கி வருகிறோம். இங்கே மனிதர்களும் விலங்குகளும் தங்களுடைய வாழ்வியலை விரும்பிய இடத்தை தக்கவைத்துக் கொள்ள பெரும் போராட்டமே நடக்கின்றது. யானைகளுக்காக இருப்பிடத்தை உறுதி செய்ய வலியுறுத்தும் நோக்கிலும், பாரம்பரிய முறைப்படி குறிப்பாக திருமணம் என்றாலே ஆடம்பரம் என்று நினைக்கின்ற கலாச்சாரத்தை உடைக்க வேண்டும் என்றும் நாங்கள் முடிவு செய்தோம்
 
இதன்படி பழங்குடி மக்களின் பாரம்பரிய ஓவியங்கள், பேனருக்கு பதிலாக துணியில் வரைந்த ஓவியம், வவக்கோல் நாற்காலி, பனை ஓலை மாலை, ஆகியவற்றுக்கு எங்கள் திருமணத்தில் நாங்கள் முக்கியத்துவம் கொடுத்தோம். திருமண விருந்தில் கூட சீரகச் சம்பா பிரியாணி, குதிரைவாலி தயிர் சாதம், பச்சை காய்கறிகள், முக்கனிகள், சுருள்பாசி லட்டுகள் தான் நாங்கள் திருமணத்திற்கு வந்த விருந்தினர்களுக்கு கொடுத்தோம். அவர்களும் விரும்பி சாப்பிட்டனர் 
 
மேலும் ஜவ்வாது மலையில் இருந்து பழங்களும், காயல்பட்டினத்திலிருந்து பனம்பதனி புட்டும் கொண்டுவர ஏற்பாடு செய்தோம். பெரும்பாலும் சர்க்கரையை நாங்கள் தவிர்த்தோம். இதனால் எங்களுக்கு பாராட்டுக்கள் குவிந்தது. அதேபோல் டீ காபி போன்றவைகளை தவிர்த்து இளநீர் பதநீர் தேங்காய்ப்பால் செம்பருத்தி சாறுதான் திருமணத்திற்கு வந்த விருந்தினர்களுக்கு நாங்கள் கொடுத்தோம். இதனால் அனைவரும் சந்தோஷமடைந்தனர் 
 
மேலும் இசைக் கச்சேரிக்கு பதில் கிராமிய கலைகளுக்கு ஏற்பாடு செய்தோம் என்கிறார்கள் இந்த புதுமணத் தம்பதியர்கள். மிகுந்த மகிழ்ச்சியோடும் புன்னகையோடும் நடந்த இந்த பாரம்பரிய திருமணத்திற்கு வந்த அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். இயற்கையுடன் இணைந்து, தமிழர் கலாச்சாரத்தையும் யானைகளின் உரிமைக்காக குரல் கொடுத்தபடியே மண வாழ்வில் அடியெடுத்து வைத்திருக்கும் அசோக் அழகேஸ்வரி என்ற இந்த தம்பதியை நாம் வாழ்த்துவோம்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்