இன்று முதல்வரின் நீங்கள் நலமா? திட்டம் தொடங்கப்படும் நிலையில் சமூக வலைதளங்களில் #நாங்கநலமாஇல்லை_ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த திட்டங்கள் மக்களை சரியாக சென்றடைகிறதா என்பது குறித்தும், மக்களின் கருத்துகளையும் கேட்டறிய இன்று நீங்கள் நலமா? திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டம் மூலமாக பிற திட்டத்தில் பயன்பெறும் பயனாளர்கள் மற்றும் மக்களிடம் துறைசார் அதிகாரிகள், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கருத்துகளை கேட்டறிய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த திட்டம் குறித்து விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “"நீங்கள் நலமா" என்று கேட்கும் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே- நலத் திட்டங்கள் நின்றுப்போச்சு! சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போச்சு! சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, மின்கட்டணம் உயர்ந்தாச்சு! விலைவாசி விண்ணைத் தொட்டாச்சு! எங்கு காணினும் போதைப்பொருள் புழக்கம் என்ற அவலநிலைக்கு தமிழ்நாடு ஆளாச்சு! இப்படி, வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்ட உங்கள் விடியா ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை!” என்று கூறி அதனுடன் #நாங்கநலமாஇல்லை_ஸ்டாலின் என்ற ஹேஷ்டேகையும் பதிவிட்டுள்ளார்.
அதை தொடர்ந்து எக்ஸ் தளத்தில் பலரும் இந்த ஹேஷ்டேகுகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதில் இந்த ஆட்சி குறித்த புகார்களையும் பலர் பகிர்ந்து வருகின்றனர்.