மதத்தை பற்றி இதுதானா நேரம்? ஏ.ஆர்.ரஹ்மானின் ஆவேச பதிவு

Webdunia
வியாழன், 2 ஏப்ரல் 2020 (07:40 IST)
இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களாக ஜெட் வேகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு குறிப்பிட்ட மதத்தினர்களால்தான் இந்த கொரோனா வைரஸ் அதிகமாக பரவுகிறது என ஒரு பிரிவினரும் இன்னொரு பிரிவினர் அதை மறுத்தும் வருகின்றனர்
 
இந்த நிலைகளில் மதத்தைப் பற்றி பேசுவதற்கு இதுதானா நேரம்? என்றும் மத வழிபாட்டுத் தலங்களில் கூடி குழப்பத்தை ஏற்படுத்த இது சரியான நேரம் அல்ல என்றும் ஏஆர் ரஹ்மான் தனது டுவிட்டரில் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
தன்னலமின்றி, தைரியமாக மருத்துவமனைகளில் வேலை செய்து கொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இந்தியா முழுக்க பணியாற்றும் அனைவருக்கும் நன்றி சொல்லவே இந்த செய்தி. இந்த மோசமான தொற்று பரவிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர்கள் இதைக் கையாள எவ்வளவு தயாராக இருக்கிறாரகள் என்று நினைக்கையில் நெஞ்சம் நிறைந்துவிட்டது. நமது உயிரைக் காப்பாற்ற அவர்கள் உயிரைப் பணயம் வைக்கின்றனர்.
 
 
இப்படியான தருணத்தில் வேற்றுமையை மறந்து ஒற்றுமையாக இருந்து கண்ணுக்கு தெரியாத கிருமியை எதிர்த்து போராடுவதே நம் நோக்கமாக இருக்கவேண்டும். மனிதம், ஆன்மீகம் ஆகியவற்றின் அழகைச் செயலில் கொண்டு வரும் நேரம். அண்டை வீட்டாருக்கு, மூத்த குடிமக்களுக்கு, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, ஏழைகளுக்கு உதவி செய்வோம்.
 
கடவுள் உங்கள் மனதில் இருக்கிறார். அதுதான் பரிசுத்தமான கோயில். இப்போது மத வழிபாட்டு தலங்களில் ஒன்றுகூடி குழப்பத்தை ஏற்படுத்த சரியான நேரமல்ல. அரசு சொல்லும் அறிவுரையைக் கேளுங்கள். சுய தனிமையில் சில வாரங்கள் இருந்தால் நமக்கு பல வருடங்கள் ஆயுள் கிடைக்கும். இந்தத் தொற்றைப் பரவி சக மனிதருக்கு தீங்கு விளைவிக்காதீர்கள்.
 
கொரோனா உங்களிடம் இருக்கிறது என்பதைக் கூட உங்களுக்கு எச்சரிக்காது. எனவே உங்களுக்கு தொற்று இல்லை என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். புரளிகளைப் பரப்பி இன்னும் பதட்டத்தையும், கவலையையும் பரப்பும் நேரமல்ல”
 
ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த பதிவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்