ஆளுநருக்கு எதிராக போராட்டம்: ஸ்டாலின் விளக்கம் ஏற்புடையதல்ல - அண்ணாமலை

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (16:09 IST)
ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தியது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் ஏற்புடையதல்ல என அண்ணாமலை கருத்து. 

 
நேற்று மயிலாடுதுறை சென்ற ஆளுனரின் கார் அணிவகுப்பின் மீது போராட்டக்காரர்கள் கொடிகளை வீசியதாக கூறப்படும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் போராட்டக்காரர்கள் எந்த கொடியையும், கற்களையும் வீசவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
 
இன்று நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கவர்னர் வாகன தாக்குதல் சம்பவத்தை கண்டித்து அதிமுக, பாஜக கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதுகுறித்து விளக்கமளித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுனர் சென்ற கார் அணிவகுப்பின் மீது தாக்குதல் நடைபெறவில்லை என ஆளுனரின் தனி உதவியாளரும், காவல்துறையினரும் தெரிவித்துள்ளதாகவும், எதிர்கட்சிகள் அவசியமின்றி வெளிநடப்பு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
 
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தியது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் ஏற்புடையதல்ல என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, ஆளுநர் எதிர்ப்பாக நடந்த போராட்டத்தில் வீடியோவில் பார்த்தால் கூட ஆளுநர் சென்ற வாகனம், பாதுகாப்பு வாகனத்தில் கொடிகளை வீசி போராட்டம் நடத்தி இருப்பது தெரிகிறது. 
 
ஆளுநர் சென்ற வாகனம் அருகே ஏன் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளித்தனர்? அதேபோல் தேசத்திற்கு எதிராகவும் முழக்கம் எழுப்பி இருக்கின்றனர். இப்படி ஒரு சம்பவம் நடந்ததில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் சொல்லும் விளக்கம் ஏற்புடையதல்ல. சித்தாந்த ரீதியாக மாற்று கருத்து இருந்தாலும், கருணாநிதி முதலமைச்சர் ஆக இருந்தபோது இதுபோல் நடக்கவில்லை. ஆனால் இப்போது நடந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்