சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பாமகவின் முப்படைகள் சந்திப்பு என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பெண்கள் பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பு குறித்து பேசினார். தமிழகத்தில் இளைஞர்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். பாமக ஆட்சிக்கு வந்தால் முழுமையான இலவச கல்வி மற்றும் மருத்துவம் கிடைக்கும் என பேசியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ” யார் கட்சி தொடங்கினாலும் அடுத்து எங்கள் ஆட்சிதான். பாமக தொடங்கி 30 ஆண்டுகள் ஆகிறது. மற்றவர்கள் ஆட்சி செய்வதற்காக நாங்கள் கட்சி தொடங்கவில்லை. எங்கள் கட்சி ஆட்சி செய்யதான் நாங்கள் கட்சி தொடங்கினோம். வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்பதை கட்சி நிறுவனர் முடிவு செய்வார்” என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே தங்களுக்கு எம்.பி சீட் கொடுக்கவில்லை என தேமுதிகவினர் அதிமுக மீது அப்செட்டாக இருப்பதாக கூறப்படும் நிலையில், பாமகவும் தொடர்ந்து அடுத்த முறை ஆட்சியை பிடிப்பது குறித்து பேசி வருகிறது. இதனால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து மற்ற கட்சிகள் விலக யோசித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.