அதிக வெயிலினால் கொரோனா பரவாதா? – வாட்ஸப் வதந்திகளை நம்ப வேண்டாம்!

திங்கள், 9 மார்ச் 2020 (10:31 IST)
அதிக வெயில் உள்ள இடங்களில் கொரோனா வைரஸ் பரவாது என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. தென்கொரியா, ஈரான், இத்தாலி என பல நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா தற்போது இந்தியாவிலும் பலரிடம் கண்டறியப்பட்டு வருகிறது.

இந்தியாவில் 39 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஓமனிலிருந்து வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் 3 வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பீலா ராஜேஷ் ”தமிழகத்தில் 60 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ரத்த மாதிரிகளில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பிலிருந்த 27 பேர் கண்டறியப்பட்டு வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அதிகமாக வெயில் இருந்தால் கொரோனா பரவாது என்று வெளியாகும் தகவல்கள் குறித்து பேசிய பீலா ராஜேஷ், இது அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட தகவல் இல்லை என்றும், சமூக வலைதளங்களில் வெளியாகும் அதிகாரப்பூர்வமற்ற செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்