சென்னை வரும் அமித்ஷா.. அதிமுக கூட்டணி உறுதியாகுமா? பரபரக்கும் அரசியல் களம்!

Mahendran

வியாழன், 10 ஏப்ரல் 2025 (13:42 IST)
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கிறது. எனவே, யாருடன் கூட்டணி அமைக்கலாம் என அரசியல் கட்சிகள் இப்போதே யோசிக்கவும், காய்களை நகர்த்தவும் துவங்கிவிட்டன. 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவோடு கூட்டணி அமைத்தார் எடப்பாடி பழனிச்சாமி. ஏனெனில், அவர் முதல்வராக நீடிக்க பாஜக மேலிடம் உதவியது. அதேபோல், சசிகலாவை கழட்டிவிட்டு அதிமுகவை பழனிச்சாமி கையில் கொடுக்கவும் பாஜக காரணமாக இருந்ததாக சொல்லப்பட்டது. 

ஆனால், அதிமுக தலைவர்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மோசமாக விமர்சிக்கவே கடுப்பான பழனிச்சாமி பாஜக கூட்டணியிலிருந்து விலகினார். இனிமேல் எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அறிவித்தது. ஒருபக்கம், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என அண்ணாமலையும் பேசி வந்தார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி அமைவதை நான் ஏற்கமாட்டேன். அப்படி நடந்தால் பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் எனவும் அறிவித்தார். 

இந்நிலையில்தான், சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார் எடப்பாடி பழனிச்சாமி. அவருடன் சிவி சண்முகம், வேலுமணி, தம்பிதுரை உள்ளிட்ட சிலரும் சென்றிருந்தார்கள். எனவே, 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணையும் என செய்திகள் வெளியானது.

அதை உறுதி செய்வது போல ‘கொள்கை கூட்டணி வேறு.. தேர்தல் கூட்டணி வேறு.. தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. ஒன்றும் அவசரம் இல்லை’ என செய்தியாளர்களிடம் பழனிச்சாமி சொன்னாரே தவிர ‘பாஜகவுடன் கூட்டணி’ இல்லை என சொல்லவே இல்லை. ஆனால், பாஜக கூட்டணியில் அதிமுக இணைவதை அண்ணாமலை விரும்பவில்லை. அதிமுக இல்லாத ஒரு மூன்றாவது கூட்டணியை உருவாக்கி தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதே அவரின் நோக்கமாக இருக்கிறது.

ஒருபக்கம், அண்ணாமலையை பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அமித்ஷாவிடம் பழனிச்சாமி கோரிக்கை வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. எனவே, விரைவில் தமிழக பாஜக தலைவராக வேறொருவர் நியமிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இரவு 10 மணியளவில் சென்னை வரும் அமித்ஷா நாளை காலை 10 மணி முதல் மதியம் 4 மணி வரை பாஜக நிர்வாகிகளை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் பற்றியும், அடுத்த பாஜக தலைவர் பற்றியும் ஆலோசனை செய்யவிருக்கிறார். அதோடு, அதிமுக கூட்டணியையும் அவர் உறுதி செய்வார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்