மூளையை தின்னும் அமீபா! ஈபிஎஸ் கோரிக்கை! - தமிழக அரசு வழிகாட்டுதல்கள்..!

Mahendran
திங்கள், 8 ஜூலை 2024 (11:57 IST)
கேரளாவில் மூளையை தின்னும் அமீபா நோய் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தமிழகத்தில் இந்த நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனை அடுத்து தமிழக அரசு இந்த நோய்க்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது

அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் இந்த நோய் குறித்து கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

'அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ்' என்ற மூளையை தின்னும் அமீபா வகை குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல் தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தேங்கி இருக்கும் நீரில் குளிப்பதை பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தவிர்க்க வேண்டும். நீர் நிலைகள், குளங்கள், ஏரிகளில் சுற்றுச்சூழல் சுகாதாரம் பேணப்பட வேண்டும்.

அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்னும் மூளையை தின்னும் நோய்த் தொற்று தொடர்பான உயிரிழப்புகள் கேரளாவில் நிகழ்ந்ததை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, குழப்பம், பிரமைகள் மற்றும் வலிப்பு போன்ற இந்நோயின் அறிகுறிகள் ஆகும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘"கேரள மாநிலத்தில் அமீபா நுண்ணுயிர் பரவலால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு மூவர் உயிரிழந்துள்ளதாக வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன.

உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். கேரளாவில் இந்த நுண்ணுயிர் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் இத்தகைய பரவல்கள் ஏற்படாவண்ணம் முன்னெச்சரிக்கையுடன் அரசு செயல்பட வேண்டும். அசுத்தமான நீரின் வாயிலாக பரவும் இந்த நுண்ணுயிர், குழந்தைகளை தொற்று ஆபத்து அதிகம் உள்ளதால், மக்களின் உயிர்களை காக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்துமாறு இந்த திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன் என பதிவு செய்திருந்தார்.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்