தேர்தலுக்கு பின் தேமுதிக காணாமல் போய்விடும்: காங்கிரஸ் பிரமுகர் ஆவேசம்

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (06:14 IST)
அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு பின் அந்த கட்சியுடனே கூட்டணி வைத்த பாமகவை விமர்சனம் செய்யும் ஊடகங்கள், அதிமுக, திமுக என இரு கட்சிகளை எதிர்த்து அரசியல் செய்து, இரு கட்சிகளையும் மோசமாக விமர்சனம் செய்த தேமுதிக, தற்போது இரு கூட்டணியிலும் இணைய பேரம் பேசி வருவதை கண்டு கொள்வதே இல்லை. கடந்த தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்த ஒரு கட்சிக்கு இவ்வளவு பில்டப் தேவையா? என்று இன்று வரை எந்த ஊடகமும் கேள்வி கேட்கவில்லை
 
இந்த நிலையில் தேர்தலுக்கு பின் தேமுதிக காணாமல் போகும் என காங்கிரஸ் கட்சியின் பிரமுகரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஈரோடு வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தபோது, தேமுதிக உடனான கூட்டணி நிலைபாடு கடைசிவரை இழுபறியாக இருக்கும் என்றும், தேர்தலுக்கு பின் அக்கட்சி காணாமல் போகும் என்றும் கூறினார். தேமுதிகவை திமுக கூட்டணியில் இணைக்க திருநாவுக்கரசர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் அக்கட்சியை கடுமையாக ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சனம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
மேலும் திமுக காங்கிரஸ் பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ளதாகவும், வரும் பாராளுமன்ற தேர்தலில் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்