தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் ஆதியோகி ரத யாத்திரை!

Webdunia
சனி, 4 பிப்ரவரி 2023 (09:07 IST)
30-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள்; 25 ஆயிரம் கி.மீ பயணம்
 

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட மக்களும் தங்கள் ஊர்களிலேயே ஆதியோகியை தரிசித்து அவரின் அருளை பெற வாய்ப்பளிக்கும் ஆதியோகி ரத யாத்திரை மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரையின் மூலம் ஒவ்வொரு ஊரிலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆதியோகியை  நேரில் தரிசனம் செய்து வருகின்றனர்.

உலகில் தோன்றிய முதல் யோகியான சிவன் சப்தரிஷிகளுக்கு (அகத்தியர் உள்ளிட்ட 7 ரிஷிகளுக்கு) யோக விஞ்ஞானம் முழுவதையும் பரிமாறினார். சப்தரிஷிகள் ஒவ்வொருவரும் அந்த விஞ்ஞானத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து சென்றனர். இது ஆன்மீகத்தில் மாபெரும் அமைதி புரட்சி நிகழ அடித்தளமாக அமைந்தது.

யோக கலாச்சாரம் உலகம் முழுவதும் பரவுதற்கு முழுமுதற்காரணமாக இருக்கும் ஆதியோகி சிவனுக்கு நன்றியை வெளிப்படுத்தும் விதமாக கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 112 அடியில் ஆதியோகியின் மார்பளவு திருவுருவம் சத்குரு அவர்களால் 2017-ம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து, ஆதியோகியை தரிசித்து அவரின் அருளை பெறுவதற்காக தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் வருகை தருகின்றனர்.

இந்நிலையில், கோவையில் செயல்படும் தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, கோவைக்கு வந்து ஆதியோகியை தரிசிக்க இயலாமல் இருக்கும் மக்கள் தங்கள் ஊர்களிலேயே அவரை தரிசிப்பதற்கு இந்த யாத்திரை வாய்ப்பளிக்கிறது.

அதன்படி, 7 அடி உயரமுள்ள ஆதியோகி திருவுருவத்துடன் கூடிய இந்த ரதங்கள் தமிழகத்தின் 4 திசைகளிலும் பயணித்து கொண்டு இருக்கின்றன. கோவையில் இருந்து கடந்த மாதம் புறப்பட்ட  5 ஆதியோகி ரதங்கள் 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சுமார் 25 ஆயிரம் கி.மீ பயணித்து மஹாசிவராத்திரியன்று மீண்டும் கோவைக்கு திரும்பும் வகையில் இந்த யாத்திரை திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த யாத்திரையில் பிப்ரவரி 18-ம் தேதி கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்திலும், அந்தந்த மாவட்டங்களிலும் நடைபெறும் ஈஷா மஹாசிவராத்திரி விழாவிற்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்