வரும் ஆண்டும் புது ரேஷன் கார்டு கிடையாது: உள்தாள் தான் ஒட்டப்படும்

Webdunia
புதன், 28 டிசம்பர் 2016 (02:53 IST)
ஆதார் எண் இணைக்கும் பணி நிறைவடையாததால், ரேஷன் கார்டில் அடுத்த ஓராண்டிற்கும் உள்தாள் ஒட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


 

தமிழகத்தின் இயங்கிவரும் நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கான குடும்ப அட்டை கடந்த 2005ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்த குடும்ப அட்டை 2009ஆம் ஆண்டு வரை பயன்படுத்தும் வகையில் அச்சிடப்பட்டு இருந்தது.

அதன் பிறகு 2010ஆம் ஆண்டு புதிய குடும்ப அட்டை வழங்குவதற்கு பதிலாக, 2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை, ஒவ்வொரு ஆண்டுக்கும் உள்தாள் ஒட்டிபடி, பழைய குடும்ப அட்டைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழக அரசு அடுத்த ஆண்டு முதல் மின்னணு குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்க திட்டமிட்டது. இந்த மின்னணு குடும்ப அட்டை, ஆதார் அட்டையுடன் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் ரே‌ஷன் கடைகளில் ஆதார் எண் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 87 சதவீதம் இந்த பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, ரேஷன் கார்டுகளில் ஆதார் எண்ணை சேர்க்காவிட்டால் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது எனவும் கூறப்பட்டது. அதன்படி, கடந்த 30ஆம் தேதியுடன் ஆதார் எண்ணை இணைக்காத ரேஷன் கார்டுகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், ரேஷன் கார்டில் மீண்டும் உள்தாள் ஒட்ட தமிழக முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கும்படியிலான உள்தாள் ஒட்டப்படவுள்ளது.  சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகள் மூலமாக ரேஷன் கார்டில் உள்தாள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்