எடப்பாடி அணிக்கு மீண்டும் திரும்புவதாக கடிதம் எழுதிய நடிகை

Webdunia
புதன், 21 பிப்ரவரி 2018 (16:38 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக பல அணிகளாக பிரிந்தவுடன் அதிமுகவில் இருந்து பல நட்சத்திரங்கள் விலகி சென்றனர். ராதாரவி, ஆனந்த்ராஜ், ஆகியோர் இவர்களில் சிலர். அந்த வகையில் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களில் ஒருவர் நடிகை விந்தியா. அதிமுகவின் பிரச்சார பீரங்கியாக இருந்த விந்தியாவின் தெளிவான, கோர்வையான பேச்சுக்கு நல்ல கூட்டம் கூடும். 
 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில் தற்போது அதிமுகவின் அணிகள் இணைந்து இரட்டை இலை சின்னமும், பெயரும் கொடியும் கிடைத்துள்ள நிலையில் மீண்டும் அதிமுகவுக்கு திரும்ப விந்தியா முடிவு செய்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
 
இந்த கடிதத்தில் நடிகை விந்தியா எழுதியுள்ளதாவது: முதலில் என்னை மன்னியுங்கள் முதல்வரே என்று கேட்கத் துடிக்கும் நேர்மையான தொண்டர்களில் நானும் ஒருத்தி..எடப்பாடியாருக்கு இத்தனை பெரிய இடமா என்று ஏளனப்பார்வை பார்த்தவர்களில் நானும் ஒருத்தி..அம்மாவைத் தவிர வேறொன்றும் அறியாத விசுவாசிகளில் நானும் ஒருத்தி. இரட்டை இலையே இதயத்துடிப்பாக எண்ணிய அ.தி.மு.க பக்தைகளில் நானும் ஒருத்தி..கழகம் இரண்டுபட்டதால் கலங்கி நின்ற கணக்கற்ற தொண்டர்களில் நானும் ஒருத்தி.. கூவத்தூர் கூத்துகளால் மனம் நொந்த மக்களில் நானும் ஒருத்தி..
 
இப்படி எத்தனையோ எதிர்மறை கருத்துகளால் மனம் வெறுத்தவர்களில் நானும் ஒருத்தியாக இருந்தாலும், இன்று என் மனம் என்னை அறியாமல் உங்களைப் பாராட்டி எழுதச் சொல்கிறது.. அம்மாவின் பிள்ளைகள் இனி அநாதை பிள்ளைகள் என எதிரிகள் ஏளனம் செய்யும்போது தாயை இழுந்து தவிக்கும் எங்களுக்கு தமையனாய் வந்தாய், அம்மாவின் ஆட்சி காத்து தைரியம் தந்தாய்..
 
நீங்கள் ஏறி வந்த படிக்கட்டுகள், தாண்டி வந்த தடைகற்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்..ஆனால், நாளைக்கு கலைத்துவிடுவோம் என்று வேளைக்கு அறிக்கைவிடும் கழக எதிரிகளிடமிருந்து இயக்கத்தையும் இரட்டை இலையையும் கட்டிக்காத்த பெருமை உங்களுக்குண்டு.” என்று அவர் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.
 
இந்த கடிதத்தை அடுத்து அவருக்கு விரைவில் அதிமுகவில் இருந்து அழைப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்