முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு அதிமுக தலைவர்கள் மாலை, மலர்களுடன் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு செல்வதுதான் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியும் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளரும் நடிகையுமான விந்தியா நேற்றிரவு திடீரென ஜெயலலிதா சமாதிக்கு மாம்பழக்கூடையுடன் வந்தார்.
ஜெயலலிதாவின் சமாதிக்கு மாம்பழக்கூடையுடன் வந்த விந்தியாவை பொதுமக்கள் வித்தியாசமாக பார்த்தனர். அப்போதுதான் அவருடைய உதவியாளர் இதற்கு விளக்கம் அளித்தார். விந்தியாவுக்கு ஆந்திராவில் 200 ஏக்கரில் மாம்பழ தோட்டம் ஒன்று உள்ளது. ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை ஒவ்வொரு ஆண்டும் அதில் விளையும் மாம்பழங்களில் ஒரு பகுதியை அவர் ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். அந்த வகையில் அவர் நேற்று தனது தோட்டத்தில் விளைந்த மாம்பழங்களில் சிலவற்றை எடுத்து கொண்டு ஜெயலலிதாவின் சமாதியில் அந்த மாம்பழங்களை வைத்து அஞ்சலி செலுத்தினார்.அதன் பின்னர் அந்த மாம்பழங்களை பொதுமக்களுக்கு தனது கைகளால் வழங்கினார்
நடைபெற்று முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் விந்தியா, அதிமுகவுக்காக தீவிர பிரச்சாரம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது