நடிகர் ரஜினிகாந்த் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது ஆலோசகர் ஒருவரை வைத்துக் கொள்ள வேண்டுமென நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்திடம் நேற்று பத்திரிக்கையாளர்கள் எழுவர் விடுதலைக் குறித்து அவரின் கருத்து என்னவென்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினி எந்த எழுவர் எனக் கேள்வியெழுப்பினார். அவரது இந்த பதில் தமிழக அரசியல் சூழ்நிலையில் பலத்த சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரி ‘20 வருடங்களாக தமிழ்நாட்டில் வாழும் ஒருவர் எப்படி ராஜிவ் கொலையில் சம்மந்தப்பட்ட 7 பேரைப் பற்றி தெரியாமல் இருக்க முடியும். நடிகர் ரஜினி நல்ல மனது உடையவராக இருக்கலாம். ஆனால் அவர் தமிழகப் பிரச்சனைகள் குறித்து இன்னும் தெரிந்துகொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. இது ஒன்றும் அறியாமை இல்லை. அறிய மறுப்பது’ எனக் கடுமையாக எதிர் வினையாற்றினார்.
பலதரப்பட்ட விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் இன்று ரஜினி பத்திரிக்கையாளர்களை தனது இல்லத்தில் சந்தித்து விளக்கமளித்தார். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு குறித்து கஸ்தூரி தனது டிவிட்டர் பதிவில் ‘ தெளிவான நேர்கானல். ஒரு நாள் முன் தயாரிப்பிலேயே இவ்வளவு மாற்றம். ரஜினிகாந்துக்கு ஒரு தெளிவான ஊடக ஆலோசனையாளர் தேவை. இந்த சந்திப்பிலும் கூட எதிர்பாராத கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் ரஜினி தடுமாறுகிறார். இதுபோன்ற பிரச்சனைகளை முன் தயாரிப்பு திட்டங்களின் மூலம் சிறப்பாக எதிர்கொள்ளலாம்’ என தெரிவித்துள்ளார்.