சென்னையில் புற்று நோயின் கடைசி நிலையில் ஏற்படுகின்ற வலி மற்றும் அந்த வலி நிவாரணத்திற்கான சிகிச்சை முறைகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மார்பக புற்றுநோயை தடுக்க பெண்கள் சுய பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், ஆரம்ப காலத்திலேயே மருத்துவரை அணுகினால் அவற்றை குணப்படுத்த முடியும் என்று தெரிவித்த அவர், பெங்களூரு மற்றும் சித்தூரை தொடர்ந்து தமிழகத்திலும் பரவலாக பன்றி காய்ச்சல் பரவி வருவதாக தெரிவித்தார். இதற்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக, மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெறுவதாக அவர் கூறினார். அதேபோல தேவையான அளவிற்கு மருந்துகளும், தடுப்பூசிகளும் இருப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது, டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு மிகவும் அபாய கட்டத்தில் மருத்துவமனைக்கு வந்த மாதவரத்தை சேர்ந்த இரட்டை குழந்தைகள் பலியானதாக எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை இயக்குநர் அரசர் சீராளர் தெரிவித்துளார்.
7 வயது இரட்டை குழந்தைகள் தீக்ஷா, தர்ஷன் காய்ச்சல் காரணமாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இரு குழந்தைகளும் இன்று இறந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.