சுவாதியிடம் கோயிலில் பேசிய நபர் யார்?: நல்ல யோசித்து பார் நான் யாருன்னு தெரியும்

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2016 (11:07 IST)
தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்த சுவாதி படுகொலையில் சிறிது சிறிதாக முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால் குற்றவாளியை அடையாளம் காண்பதிலும், அவனை பிடிப்பதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது.


 
 
ஆனால், ரயில் நிலையத்தின் வெளியே அருகில் உள்ள வீடுகளில் பதிவு செய்யப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவான குற்றவாளியின் உருவத்தை வைத்து விசாரணை நடத்தி வரும் காவல் துறை, சுவாதியின் பேஸ்புக் கணக்கை முடக்கி விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
 
சுவாதியின் மொபைல் போன் காணாமல் போனதையொட்டி அவரது நம்பர் தொலைந்துவிட்டதாக கூறி அதே நம்பரை திரும்ப பெற்று அவரது வாட்ஸ் ஆப்பை ஓப்பன் செய்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர் காவல் துறையினர்.
 
இந்நிலையில், சூளைமேட்டில் உள்ள கங்கையம்மன் கோயில் பூசாரி காவல் துறைக்கு ஒரு துப்பு கொடுத்ததாக கூறப்படுகிறது. சுவாதி அவரது வீட்டின் அருகில் உள்ள கங்கையம்மன் கோயிலுக்கு போகும் பழக்கம் உள்ளவராம்.
 
சுவாதி கொலை செய்யப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பு அந்த கோயிலுக்கு சென்றபோது சுவாதிக்கு பின்னால் வந்து நின்ற ஒருவர், என்னை தெரியுதா என கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த சுவாதி இல்லை உங்கள தெரியலையே என்று கூறியுள்ளார். நல்லா யோசிச்சி பாரு நான் யாருன்னு தெரியும் என்று சொல்லிவிட்டு போனாராம் அந்த நபர்.
 
இதை கவனித்த அந்த கோயில் பூசாரி தற்போது காவல் துறையிடம் கூறியுள்ளார். சிசிடிவி கேமராவில் பதிவான அந்த நபரின் உருவமும் கோயிலில் சுவதியை பின் தொடர்ந்த நபரின் உருவமும் ஒன்றா என காவல் துறை பூசாரியிடம் விசாரணை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்