சென்னையில் கனமழை எதிரொலி: மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு..!

Siva
செவ்வாய், 15 அக்டோபர் 2024 (11:28 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர பகுதிகளில் இன்றும் நாளையும் கனமழை, மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் சாலைகளிலும், ரயில்வே தண்டவாளங்களிலும் வெள்ளம் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படலாம் என்பதால், அதிகப்படியான மெட்ரோ ரயில் சேவைகளை இயக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில், இன்று கூடுதல் மெட்ரோ ரயில் சேவைகள் நடத்தப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும். அனைத்து நிலையங்களிலிருந்து காலை 5 மணிக்கு முதல் ரயில், இரவு 11 மணிக்கு கடைசி ரயில் இயக்கப்படும். வழக்கமாக 42 ரயில்கள் இயக்கப்படும் நிலையில், இன்று 47 ரயில்கள் இயக்கப்படும்.

பச்சை வழித்தடத்தில் (சென்ட்ரல் - பரங்கிமலை) 5 நிமிடத்திற்கு ஒரு ரயில், நீல வழித்தடத்தில் (விமான நிலையம் - விம்கோ நகர்) 6 நிமிடங்களுக்கு ஒரு ரயில், வண்ணாரப்பேட்டை - ஆலந்தூர் வரையில் 3 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.

பயணிகள் இந்த சேவைகளை பயன்படுத்தி தங்கள் பயணங்களை தகுந்த விதமாக திட்டமிட்டு பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்