வேலைக்கு சென்றதால் ஆத்திரத்தில் மனைவியை கொன்ற கணவன்

Webdunia
செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (15:21 IST)
ராஜபாளையத்தில் மனைவி வேலைக்கு சென்ற ஆத்திரத்தில் அவரை கொலை செய்த கணவனை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ராஜபாளையத்தை சேர்ந்தவர் நவீன்தாஸ். இவரது மனைவி கோகுலலட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நவீன்தாஸ் டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வந்தார். நவீந்தாஸ் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் பிரச்சினை செய்துள்ளார். மேலும் நடத்தையிலும் சந்தேகம் அடைந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த கோகுலலட்சுமி தனது 2 குழந்தைகளுடன் 6 மாதங்களுக்கு முன்பு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். 
 
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோகுல லட்சுமி தளவாய்புரத்தில் உள்ள தனியார் செல்போன் கடைக்கு வேலைக்கு சென்றார். இதையறிந்த நவீன்தாஸ் மகளை வேலைக்கு அனுமதிக்கக்கூடாது எனவும், மீறி சென்றால் கொலை செய்து விடுவேன் என்றும் கோகுல லட்சுமியின் தாயாரிடம்  கூறியுள்ளார்.
 
இதனை பொருட்படுத்தாத கோகுல லட்சுமி வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நவீன்தாஸ் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டு தனது நண்பர்களுடன்  மனைவி வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று தகராறு செய்துள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே ஆத்திரமடைந்த நவீன்தாஸ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த கோகுல லட்சுமி பரிதாபமாக இறந்தார்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் கோகுல லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்  நவீன்தாஸ் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்த போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்