9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran

வெள்ளி, 23 மே 2025 (16:30 IST)
திருச்சியை சேர்ந்த லோகேஷ் என்பவர் பெங்களூருவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிகிறார். அவரது 9 வயது மகள் அவந்திகா  ஒரு தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார்.
 
கோடை விடுமுறையால் வீட்டிலேயே இருந்த அவந்திகா, நேற்று மதியம் வெளியே சென்று விளையாட அனுமதி கேட்டதாக தெரிகிறது. அப்போது, வெயில் அதிகமாக இருந்ததால் மாலையில் விளையாட செல்லலாம் என்று தந்தை லோகேஷ் கூறியுள்ளார். இதனால் சிறுமி மனமுடைந்துவிட்டு தனது அறைக்கு சென்றுள்ளார்.
 
சில நேரம் கழித்து மதிய உணவுக்காக அழைக்க பெற்றோர் சென்ற போது, அவந்திகா இருந்த அறை உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்தது. பலமுறை அழைத்தும் பதில் தராததால், கதவை உடைத்துவிட்டு உள்ளே சென்றதில் அவர்கள் கண்ட காட்சியால் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். சிறுமி தனது துப்பட்டாவால் தூக்கிட்டு உயிரை மாய்த்திருந்தார்.
 
உடனே அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், டாக்டர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். 9 வயது குழந்தையின் தற்கொலை, அந்த பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
 
தந்தை லோகேஷ் அளித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்