பள்ளியில் ஆசிரியர் நாற்காலியில் அமர்ந்த 3-ம் வகுப்பு மாணவனை பள்ளி நிறுவனர் பிரம்பால் தாக்கியுள்ளார்.
சென்னை மந்தைவெளி 5-வது குறுக்குத்தெருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவன் குரு விக்னேஷ் (8). இவன் நேற்று முன்தினம் மதியம் வகுப்பறையில் படித்து கொண்டிருந்தான். அப்போது தனது ஷூ அவிழ்ந்துவிட்டதால், அதை மாட்ட சிரமப்பட்டான். ஆசிரியை இல்லாததால் அவரது நாற்காலியில் அமர்ந்து ஷூவை சரி செய்து கொண்டிருந்தான். அப்போது வகுப்பறைக்குள் தமிழ் ஆசிரியர் மது நுழைந்தார். நாற்காலியில் குரு விக்னேஷ் அமர்ந்து ஷூ மாட்டிக் கொண்டு இருப்பதை பார்த்த மது, கோபம் அடைந்து மாணவனை தரதரவென இழுத்து, பள்ளி நிறுவனர் சிவராஜ் என்பவரிடம் கூட்டிச் சென்றார்.
பள்ளி நிறுவனர் சிவராஜ், மாணவன் குருவிக்னேசை பிரம்பால் சரமாரியாக அடித்துள்ளார். பிரம்பால் அடித்ததால் மாணவன் உடலில் பல இடங்களில் வீக்கம் ஏற்பட்டிருந்தது. அடி தாங்காமல் அழுதபடியே குரு விக்னேஷ் வகுப்பறையில் அமர்ந்திருந்தான்.மாலை பள்ளி முடிந்தது, குரு விக்னேசை வீட்டுக்கு அழைத்துச் செல்ல அவரது தாய் பத்மா வந்த போது, சிறுவன் தாயை கட்டிப்பிடித்து பிரம்பால் அடிபட்டதை சொல்லி அழுதான்.
இதுகுறித்து பத்மா பட்டினப்பாக்கம் காவல் நிலையத்துக்கு புகார் கொடுத்தார். இதையடுத்து பள்ளி நிறுவனர் சிவராஜ், காவல் நிலையம் வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். விசாரணைக்கு பின்னர் சிவராஜ் காவல் நிலையத்தில் இருந்து சென்றுவிட்டார்.பிரச்சினை முடிந்துவிட்டது. இனிமேல் இதுபோல நடக்காது. வீட்டுக்கு செல்லுங்கள் என்று காவல் ஆய்வாளர் பத்மாவிடம் தெரிவித்தார். இதையடுத்து பத்மா வீட்டுக்கு சென்றார்.
வழக்கம்போல நேற்று காலை குரு விக்னேசை பள்ளிக்கு பத்மா அழைத்துச் சென்றார். அப்போது அங்கு இருந்த சிவராஜ், குரு விக்னேசை கண்டித்ததுடன், பத்மாவை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பத்மா மற்றும் அங்கிருந்த சில மாணவர்களின் பெற்றோர் ஒன்று சேர்ந்து, பள்ளியை முற்றுகையிட்டு சிவராஜுக்கு எதிராக கோஷமிட்டனர். உடனே பட்டினப்பாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து அங்கிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சிவராஜ் மீது நடவடிக்கை எடுப்போம் என்று உறுதி அளித்தனர்.
இதுகுறித்து பத்மா கூறுகையில், “சின்ன தவறுக்கு இப்படி பிரம்பால் அடித்து காயப்படுத்தி இருக்கிறார்கள். இதுகுறித்து முறையிட்டால் அப்படித் தான் செய்வேன், உன்னால் முடிந்ததை பார் என்று என்னிடம் பள்ளி நிறுவனர் சிவராஜ் சவால் விடுகிறார். சம்பவம் நடந்த அன்றே காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். ஆனால் பள்ளி நிர்வாகத்துக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்பட்டு, சிவராஜ் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட்டனர். காலையில் எனது மகனை பள்ளியில் விட வந்தபோது என் மீதே போலீசில் புகார் கொடுக்கிறாயா? என்று மிரட்டியதுடன், பெண் என்றும் பார்க்காமல் ஆபாச வார்த்தையால் திட்டினார். எனவே அவர் மீது காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்.” என்றார்.