இதுகுறித்து பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த மார்ச் 1 முதல் மே 22-ம் தேதி வரை 12.44 செமீ மழை தமிழகத்தில் பதிவாகியுள்ளது. இது இயல்பான அளவான 12.5 செமீயை விட சுமார் 1 சதவீதம் குறைவாகும். கடந்த 24 மணிநேரத்தில் கடலூர், கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் கடந்த மே 16 முதல் மே 22 வரையில் மழையால் 15 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
கனமழை காரணமாக, கடந்த 24 மணிநேரத்தில் 13 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 40 குடிசைகள், வீடுகள் சேதமடைந்துள்ளன. ஈரோடு மாவட்டத்தில் ஒரு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்ட 136 பேர் இன்று காலை வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 4,385.40 ஹெக்டேர் பரப்பிலான நெல், சோளம், பருப்பு, எள்ளு, கடலை, பருத்தி மற்றும் கரும்பு ஆகிய வேளாண் பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.