கூடு விட்டு கூடு பாய முயற்சி செய்த இரு வாலிபர்கள் மர்ம மரணம்

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2016 (11:12 IST)
பழனி அருகே கூடு விட்டு கூடு பாய முயற்சித்த இரண்டு இளைஞர்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
பழனி அருகே ஆயக்குடியைச் சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ணன்(37), ராஜ்குமார்(26). இவர்கள் இருவரும் ஆன்மீகத்தில் அதீத நாட்டமுள்ளவர்கள். இவர்கள் அடிக்கடி பொன்னிமலைக்கரடு என்ற மலைப்பகுதிக்கு சென்று தியானம் செய்வது வழக்கம்.
 
இந்நிலையில் கடந்த மாதம் 29-ஆம் தேதி இவர்கள் இருவரும் தியானம் செய்ய காலையில் பொன்னிமலைக்கரடு சென்றனர். மறுநாள் வரைக்கும் இருவரும் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த இரு வீட்டாரும் அவர்கள் தியானம் செய்யும் இடத்திற்கு சென்றனர்.
 
அங்கு சென்று பார்த்தபோது இருவரும் இறந்த நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இருவரின் உடலிலும் எந்த சிறு காயமும் இல்லை. இதனையடுத்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருவரின் உடலையும் கைப்பற்றிய காவல் துறை பிரேத பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
 
இறந்த இருவரும் அடிக்கடி கூடு விட்ட கூடு பாயும் வித்தை பழகி வருவதாகவும் இதில் தாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் எனவும் கூறி வந்தனர் என அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அவர்கள் கூடு விட்டு கூட பாயும் பயிற்சியில் ஈடுபட்ட போது உயிரிழந்தார்களா என காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்