12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கும் மே மாத சம்பளம் உடனே வழங்க வேண்டும்- தினகரன்

Webdunia
சனி, 10 ஜூன் 2023 (17:27 IST)
12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம் வழங்கப்படாது என பள்ளிக்கல்விதுறை அறிவித்திருப்பதை வன்மையாக கண்டிக்கின்றேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 12000 பகுதி நேர ஆசிரியர்கள் பணி செய்து கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு 11 மாத ஊதியம் மட்டுமே உண்டு என்றும் கோடை விடுமுறை மாதம் ஆன மே மாதம் ஊதியம் இல்லை என்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், அமமுக பொதுச்செயலாளர் தினகரன் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம் உடனே வழங்க நடவடிக்கை எடுப்பதுடன் திமுக, தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி அவர்களை பணி நிரந்தரம் செய்யவும் முதலமைச்சர் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’பணி நிரந்தரம் செய்யக் கோரியும், மே மாதம் சம்பளம் வழங்கக் கோரியும் பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியபோது அவர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று கூறிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், இப்போது பகுதி நேர ஆசிரியர்களின் வயிற்றில் அடிப்பது போல சம்பளம் வழங்க மறுப்பது ஏன்?

குறைந்த சம்பளத்தில் வீட்டு வாடகை, குடும்ப செலவு என ஏற்கனவே கடனில் தவித்து வருகின்ற பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொள்ளாமல் ஒரு மாத சம்பளம் தரப்படாது என்று அறிவிப்பதுதான் திராவிடமாடல் ஆட்சியா?

12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கும் மே மாத சம்பளம் உடனே வழங்க நடவடிக்கை எடுப்பதுடன் திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி அவர்களை பணி நிரந்தரம் செய்யவும் முதலமைச்சர் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன்'' என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்