காவல்துறையினரை 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் கடுப்பேற்றி உள்ளார்.
வேலூர் அடுத்த பாகாயம் காவல் நிலையத்திற்கு ஒரு மாணவன் அழுதுகொண்டே வந்தான். அவனை பார்த்து பதறிபோன காவலர் ‘‘ஏன் அழுகிறாய்?’’ என்று கேட்டனர். அப்போது அந்த சிறுவன் கூறிய தகவல் காவல்துறையினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அந்த சிறுவன் கூறியதாவது, ”நான் வேலூர் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறேன். இன்று காலையில் நான் ஆற்காடு சாலையில் வந்து கொண்டிருந்தேன். அப்போது அங்கு ஒரு ஆம்புலன்ஸ் நின்றது. அதன் அருகில் நான் சென்றபோது ஆம்புலன்சில் இருந்தவர்கள் என்னிடம் பேச்சு கொடுத்தனர். திடீரென என்னை தூக்கி ஆம்புலன்சில் போட்டனர். அங்கிருந்த ஒருவர் எனது முகத்தில் கைக்குட்டையை வைத்தார். அதை நான் முகர்ந்ததும் மயக்கம் அடைந்துவிட்டேன். வெகுநேரம் கழித்து எனக்கு மயக்கம் தெளிந்தது. எழுந்து பார்த்தேன். ஆம்புலன்சு நின்று கொண்டிருந்தது. அதில் இருந்தவர்கள் வெளியில் நின்று தெலுங்கில் பேசிக்கொண்டிருந்தனர். ஆம்புலன்சில் என்னைப் போல 4 சிறுவர்கள் மயக்க நிலையில் இருந்தனர். நான் யாருக்கும் தெரியாமல் ஆம்புலன்சில் இருந்து இறங்கினேன். அப்போது அந்த இடம் அடுக்கம்பாறை என்பது தெரியவந்தது. அங்கிருந்து இங்கு நடந்த வந்தேன்.” என்றான்.
இவ்வாறு அந்த மாணவன் கூறியதும் பதறிப்போன காவல்துறையினர், ஆந்திராவை சேர்ந்த கும்பல் சிறுவர்களை கடத்தி இருக்கலாமோ? என்று சந்தேகித்து, அதற்கான நடவடிக்கையில் இறங்கினர். இருந்த போதிலும் பாகாயம் காவல் ஆய்வாளருக்கு மாணவனின் மீது சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவனை தனியாக அழைத்து சென்று காவல்துறையினர் பாணியில் விசாரித்தார். அப்போது அந்த மாணவன் கடத்தல் நாடகமாடியது தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு அந்த மாணவன் கூறியாதாவது, “சார், நான் பாடங்களை சரியாக படிக்க மாட்டேன். எனவே ஆசிரியர்களும், பெற்றோரும் திட்டிக் கொண்டே இருப்பார்கள். எனவே நான் திருவண்ணாமலைக்கு சென்றேன். அங்கு ‘கபாலி’ படம் பார்த்தேன். பின்னர் வேலூருக்கு திரும்பி வந்தேன். நான் திருவண்ணாமலைக்கு சென்று ‘கபாலி’ படம் பார்த்தது தெரிந்து பெற்றோர் என்னை திட்டுவார்களோ? என்று பயந்து நான் கடத்தப்பட்டதாக நாடகம் ஆடினேன்’’ என்றான். இதைத்தொடர்ந்து அந்த மாணவனின் பெற்றோருக்கு காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். காவல் நிலையத்திற்கு வந்த பெற்றோர்களுக்கும் மாணவனுக்கும் காவல்துறையினர் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.