சமீபத்தில் யெஸ் வங்கி வாராக்கடன் காரணமாக நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்ததையடுத்து அந்த வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இந்நிலையில், இதன் வாடிக்கையாளர்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம் என யெஸ் வங்கி அறிவித்துள்ளது.
யெஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் மாதம் ரூபாய் 50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுக்க முடியாது என்ற உத்தரவையும் பிறப்பித்தது. இதனால் யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் ஒருசிலர் சுதாரித்து இந்த உத்தரவு பிறப்பிக்கும் முன்னரே கோடிக்கணக்கான பணத்தை எடுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் நேற்று காலை அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடியாக யெஸ் வங்கி நிறுவனர் ரானாகபூர் வீட்டிற்கு சென்று சோதனை செய்ததாக தகவல்கள் வெளிவந்தது. இந்த சோதனைக்கு பின்னர் விசாரணைக்காக ரானாகபூரை அமலாக்கத் துறை அதிகாரிகள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அமலாக்கத்துறை அலுவலகத்தில் பல மணி நேரமாக அவரிடம் விசாரணை செய்ததாகவும், விடிய விடிய அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்னர் இன்று அதிகாலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கைது செய்யப்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,தற்போது யெஸ் வங்கியில் டெபிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் பணம் எடுக்கலாம் என யெஸ் வங்கி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.