ஜனநாயகம் புதைக்கப்பட்டது: எடியூரப்பா ஆட்சி அமைக்க அழைப்பு குறித்து யஷ்வந்த் சின்ஹா கருத்து

Webdunia
புதன், 16 மே 2018 (21:01 IST)
கர்நாடக மாநிலத்தில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான 112 எம்.எல்.ஏக்கள் கிடைக்காததால் நேற்றுமுதல் அரசியல் குழப்பநிலை நிலவி வந்தது. தனிப்பெரும் கட்சியான தங்களை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்க வேண்டும் என பாஜகவும், 117 எம்.எல்.ஏக்கள் கொண்ட தங்கள் கூட்டணியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று காங்கிரஸ்-மஜத கட்சியும் கவர்னருக்கு கோரிக்கை விடுத்தன.
 
இந்த நிலையில் சற்றுமுன் ஆட்சி அமைக்க பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தலைவர் எடியூரப்பாவுக்கு கர்நாடக கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் எடியூரப்பா தன்னுடைய மெஜாரிட்டியை நிரூபிக்க 11 நாட்கள் கால அவகாசமும் கொடுத்துள்ளார். இந்த நிலையில் நாளை காலை 9.30 மணிக்கு எடியூரப்பா, கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பதவியேற்கவுள்ளார். அவருடன் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் கர்நாடகாவில் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கருத்து கூறியுள்ளார். இவர் ஏற்கனவே கடந்த சில மாதங்களாக மோடி மற்றும் பாஜக தலைமைக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து யஷ்வந்த் சின்ஹா மேலும் தனது டுவிட்டரில் கூறியதாவது: வெட்கமில்லாமல் கர்நாடகாவில் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்க முயற்சி செய்யும் கட்சியில் இருந்து வெளியேறியதில் மகிழ்ச்சியடைகிறேன். அடுத்த வருடம் மக்களவை தேர்தலில் மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றாலும், இதேபோன்ற செயலை அங்கும் செய்யும்,” என குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்