சாக்லேட் தராத கணவர்; விரக்தியில் மனைவி தற்கொலை!

Webdunia
ஞாயிறு, 9 ஏப்ரல் 2023 (12:33 IST)
கணவர் சாக்லேட் வாங்கி தராத விரக்தியில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணவன் – மனைவி இடையே சின்ன சின்ன சண்டைகள் ஏற்படுவது தாம்பத்ய வாழ்க்கையில் சகஜமான ஒன்றுதான். ஆனால் சில சமயம் சண்டைகள் எல்லை மீறும்போது மோசமான விளைவுகளையும் சந்திக்க வேண்டி வருகிறது.

பெங்களூரு அருகே உள்ள ஹன்னூர் பகுதியை சேர்ந்தவர் கௌதம். இவரது மனைவி நந்தினி. இருவரும் கல்லூரி காலத்தில் இருந்தே தீவிரமாக காதலித்து வந்த நிலையில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பாய் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

கௌதம் சலூன் கடை ஒன்றை நடத்தி வரும் நிலையில் சமீப காலமாக நந்தினிக்கும் கௌதமுக்கும் இடையே சண்டை அடிக்கடி ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று காலையே கௌதம் நந்தினியிடம் சண்டை போட்டுவிட்டு சலூன் கடைக்கு சென்றுள்ளார்.

பின்னர் கௌதமுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய நந்தினி தனக்கு சாக்லேட் வாங்கி வருமாறு கூறியுள்ளார். ஆனால் அதற்கு கௌதம் ரிப்ளை செய்யாததாக தெரிகிறது. நந்தினி கால் செய்த போதும் கௌதம் எடுக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் இரவு 11 மணி அளவில் நந்தினி கௌதமிற்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும், குழந்தைகளை பார்த்துக் கொள்ளுமாறும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குறுஞ்செய்தியை கண்டு கௌதம் அலறியடித்து வீட்டிற்கு ஓடியுள்ளார். ஆனால் அதற்குள் காலம் கடந்துவிட்டது. அவரது காதல் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். உடனடியாக மீட்டு அவரை மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்