தலைமை நீதிபதியை வரவேற்காத அதிகாரிகள்.. தலித் என்பது காரணமா?

Mahendran

செவ்வாய், 20 மே 2025 (16:12 IST)
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடந்த ஒரு முக்கிய நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கலந்து கொண்ட போது, அவரை வரவேற்க மாநிலத்தின் முக்கிய உயர் அதிகாரிகள் யாரும் வராதது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
 
மகாராஷ்டிரம் மற்றும் கோவா பார் கவுன்சில் சார்பில் மும்பை தாதா அரங்கில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொள்ளும் பொருட்டு, நாட்டின் 52-வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற பி.ஆர். கவாய், தனது சொந்த மாநிலமான மகாராஷ்டிரத்தைத் தலைமை நீதிபதியாக முதன்முறையாக வந்திருந்தார்.
 
இந்நிலையில், மரபு நடைமுறைப்படி வரவேற்க வேண்டிய தலைமைச் செயலாளர், மாநில காவல் இயக்குநர், மும்பை போலீஸ் ஆணையர் ஆகியோர் யாரும் வரவில்லை. இதனால் நிகழ்ச்சியின் போது நேரடியாகவே, இந்த புறக்கணிப்பில் அவர் ஏமாற்றம் மற்றும் வருத்தம் தெரிவித்தார்.
 
“நாட்டின் நீதித்துறைக்கு மற்ற நிர்வாக பிரிவுகள் மதிப்பளிக்க வேண்டும். எல்லா அமைப்புகளும் ஒருமித்த பணியில் இணைந்து செயல்படவேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.
 
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “தலித் தலைமை நீதிபதியாய் இருப்பதால் மரியாதை வழங்க மறுக்கப்பட்டதா?” என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
 
பின்னர், சாய்த்ய பூமி நினைவிடத்திற்கு சென்ற போது, அதிகாரிகள் வந்து சந்தித்தனர். ஆனால் முதற்கட்ட வரவேற்பில் ஏற்பட்ட சீர்கேடு ஏற்கவேண்டியதல்ல என்பதே பலரின் கருத்து.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்