உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ராஜ்ய சபாவில் கூறுகையில், ''வடகிழக்கு மாநிலங்களில் செயல்படும் உல்பா அல்லது என்.டி.எப்.பி.,(எஸ்), ஆகிய அமைப்புகள், தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றன. வன்முறையை கைவிட்டால், எந்த அமைப்புடனும் பேச, அரசு தயாராக உள்ளது,'' என்றார்.
மக்களின் நலனுக்காக செயல்படாத தனியார் வங்கிகளை, தேசியமயமாக்க வேண்டும்.
லோக்சபாவில், பா.ஜ., - எம்.பி., சிந்தாமன் மால்வியா பேசுகையில்,''சில தனியார் வங்கிகள், 100 சதவீத லாப நோக்கில்தான் செயல்படுகின்றன. சாதாரண மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம், இந்த வங்கிகளிடம் இல்லை. 'ஜன்தன்' போன்ற மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களை இந்த வங்கிகள் செயல்படுத்துவதில்லை. சாதாரண மக்களின் நலனுக்காக செயல்படாத தனியார் வங்கிகளை, தேசியமயமாக்க வேண்டும்,'' என்றார்.
நிதியை சமூக நல திட்டங்களுக்கு பயன்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை.
லோக்சபாவில் தொலைதொடர்பு மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா பேசுகையில், ''அஞ்சல் அலுவலக கணக்கில், கோரப்படாமல் உள்ள நிதியை சமூக நல திட்டங்களுக்கு பயன்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை. கணக்கு வைத்திருந்தவரின் வாரிசுகள் கேட்கும் வரை, அந்த பணம், அரசிடமே இருக்கும்,'' என்றார்.
2050ம் ஆண்டில், 60 சதவீத இந்தியர்கள், நகரங்களில் வசிப்பார்கள்.
லோக்சபாவில், நகர்ப்புற மேம்பாட்டு இணை அமைச்சர் இந்தர்ஜித் சிங் கூறுகையில்,''கடந்த, 2011ல் எடுக்கப்பட்ட, மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 31 சதவீத இந்தியர்கள், நகரங்களில் வசிக்கின்றனர். வரும் ஆண்டுகளில், நகரங்களில் மக்கள் குடியேறுவது அதிகரிக்கும். 2050ம் ஆண்டில், 60 சதவீத இந்தியர்கள், நகரங்களில் வசிப்பர்,'' என்றார்.
'கால் டிராப்' துண்டிப்பு பிரச்னை.
லோக்சபாவில், தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா கூறுகையில்,''டெலிபோனில், 'கால் டிராப்' என்கிற அழைப்பு துண்டிப்பு பிரச்னைக்கு, இன்னும், இரண்டு அல்லது மூன்று மாதங்களில் தீர்வு காணப்படும். இது தொடர்பாக, தொலை தொடர்பு நிறுவனங்களின் அதிகாரிகளுடன், இரண்டு நாட்களுக்கு முன் பேசினேன். கால் டிராப் பிரச்னைக்கு தீர்வு காண சில ஆலோசனைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன,'' என்றார்.
சி.பி.ஐ.,யில், 20 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன.
லோக்சபாவில், பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில்,''சி.பி.ஐ.,யில், 20 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், 1,300க்கும் அதிகமான வழக்குகள் தேங்கியுள்ளன. சி.பி.ஐ.,யிடம், 2014 டிசம்பர் 31 வரை 1,004 வழக்குகள் தேங்கி கிடந்தன. இப்போது, இது, 1,286 வழக்குகளாக அதிகரித்துள்ளது,'' என்றார்.