காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார் விஜயதரணி..! தேர்தலில் வாய்ப்பு கிடைக்குமா.?

Senthil Velan

சனி, 24 பிப்ரவரி 2024 (14:14 IST)
காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி, அந்த கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் இன்று இணைந்தார். டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமையகத்தில் எல்.முருகன் முன்னிலையில் விஜயதரணி இணைந்தார்.
 
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு எம்.எல்.ஏ.வாகவும், சட்டசபை காங்கிரஸ் கொறடாவாகவும் இருந்தவர் விஜயதரணி. இவர் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து 3வது முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 
 
வசந்தகுமார் எம்.பி. மறைந்ததை அடுத்து கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் விஜயதரணி போட்டியிட  முயற்சித்தார். ஆனால், வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்துக்கு அந்த இடம் வழங்கப்பட்டது. அவரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அன்று முதல் அவர் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்துள்ளார்.
 
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட தனக்கு சீட் வழங்க வேண்டும் என்று விஜயதரணி காங்கிரஸ் மேலிடத்தை வலியுறுத்தி வந்தார். ஆனால், காங்கிரஸ் சார்பில் மீண்டும் விஜய் வசந்துக்கே சீட் வழங்க அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவதால் விஜயதரணி கடும் அதிருப்தியில் இருந்ததாக தகவல் வெளியானது.

இதை அடுத்து அவர் பாஜகவில் இணைய உள்ளதாகவும், இதற்காக சட்டமன்ற கூட்டத்தை புறக்கணித்து டெல்லியில் முகாமிட்டிருப்பதாகவும் தகவல் பரவியது. பாஜகவில் இணையப்போவதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவலை விஜயதரணி ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை.
 
இந்த சூழலில் டெல்லியில் பா.ஜ.க தலைமையகத்தில் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் விஜயதரணி இணைந்தார். பாஜகவில் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் மிகப்பெரிய தலைவர் பிரதமர் மோடியின் கீழ் இந்தியா பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் விஜயதரணி கூறியுள்ளார்.

ALSO READ: கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படுமா.? திமுக இன்று 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை..!!
 
பா.ஜ.கவில் இணைந்த விஜயதரணிக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படுமா? அல்லது பாஜகவில் புதிய பதவிகள் வழங்கப்படுமாஎன்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்