இந்திய வங்கிகளிடம் வாங்கிய கடனை செலுத்தாமல், இங்கிலாந்து நாட்டுக்கு தப்பி சென்ற பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவிற்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் வாங்கியுள்ள ‘மதுபான ஆலை முதலாளி’ விஜய் மல்லையா, கடனைத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பி ஒடி விட்டார். இதுதொடர்பாக வழக்குகள் நடைபெற்று வருகின்றன.
இந்த வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என்று பல முறை சம்மன் அனுப்பியும் இதுவரை அவர் நேரில் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவரமுடியாத கைது உத்தரவை பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், திடீர் திருப்பமாக விஜய் மல்லையா இந்தியா திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரின் பாஸ்போர்ட் முடக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இதுவரை டிமிக்கி கொடுத்து வந்த விஜய் மல்லையா, விரைவில் இந்தியா திரும்பி வழக்குகளை சந்திப்பார் என்று கூறப்படுகிறது.