நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வாட்டாள் நாகராஜ் அவர் போட்டியிட்ட தொகுதியில் டெபாசிட் இழந்து தோல்வி அடைந்துள்ளார்.
கடந்த 12ம் தேதி கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் துவங்கியது. அதில், துவக்கம் முதலே பாஜக முன்னிலை வகித்து வந்தது. ஆனால், ஆட்சி அமைக்க தேவையான 112 இடங்கள் பாஜகவிற்கு கிடைக்கவில்லை. மேலும், திடீர் திருப்பமாக, மஜத ஆட்சி அமைக்க காங்கிரஸ் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. காங்கிரஸின் முடிவை தேவகவுடாவும் ஏற்றுக்கொண்டார். எனவே, மஜத கட்சி கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது ஒருபுறம் எனில், எப்போதும் தமிழகத்துக்கு எதிராக பேசும், ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்தும் வாட்டாள் நகராஜ் இந்த தேர்தலில் மண்ணை கவ்வியுள்ளார். தமிழர்கள் அதிகம் வசிக்கும் சாம்ராஜ் நகர் தொகுதியில் அவர் போட்டியிட்டார். அந்த தொகுதியில் தமிழில் பேசி அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால், வெறும் 5648 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்துள்ளார்.
காவிரி விவகாரத்தில் இவரின் அமைப்பை சேர்ந்தவர்களே தமிழர்களின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.