சுதந்திர தினத்தன்று தேசிய கொடி ஏற்றாத வீடுகளின் புகைப்படங்களை தனக்கு அனுப்புமாறு உத்தரகாண்ட் பாஜக தலைவர் மிரட்டும் தோனியில் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா ஆகஸ்டு 15ம் தேதி திங்கட்கிழமை அன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகளை நடத்த மத்திய, மாநில அரசுகள் ஆயத்தம் ஆகி வருகின்றன.
நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் மக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை வைக்க வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் பேசியுள்ள உத்தரகாண்ட் பாஜக தலைவர் மஹேந்திர பட் “சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றாத வீடுகளில் வசிக்கும் மக்களை நம்ப இந்த நாடு தயாராக இல்லை. தேசிய கொடி ஏற்றாதவர்கள் வீடுகளின் புகைப்படங்களை எனக்கு அனுப்புங்கள். தேசப்பற்று உள்ளவர்கள் யார்? இல்லாதவர்கள் யார்? என நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துகிறேன்” என பேசியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.