நாடு முழுவதும் நேற்று முன் தினம் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் நடந்த நீட் தேர்வை 22 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதிய நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஜக்தியால் என்ற பகுதியைச் சேர்ந்த ஜங்கா பூஜா என்பவரும் நீட் தேர்வு எழுதினார். ஏற்கனவே இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று மீண்டும் அவர் தேர்வு எழுதிய போது, தோல்வி பயத்தால் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்தவுடன் "இந்த முறையும் நல்ல மதிப்பெண் பெற முடியாது" என்ற எண்ணத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
அதேபோல், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அடிலாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் என்பவரும், "நீட் தேர்வில் தன்னால் சிறப்பாக செயல்பட முடியவில்லை" என்று மனமுடைந்த நிலையில் வீடு திரும்பியதாகவும், வீட்டிற்குள் வந்ததும் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.