நாடு சுதந்திரம் ஆன பின்னர் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற முதல் மாணவர்.. உபி கிராமத்தில் அதிசயம்..!

Mahendran

திங்கள், 5 மே 2025 (18:01 IST)
உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள நிசாம்பூர் என்ற ஒரு மிகவும் பின்தங்கிய கிராமத்தில், ராம்கேவல் என்ற மாணவர் பத்தாம் வகுப்பு தேர்ச்சியடைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
 
இந்த கிராமத்தில் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இதுவரை ஒருவரும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லை. அத்தகைய சூழ்நிலையில், ராம்கேவல் தான் முதலாவது தேர்ச்சி பெற்ற மாணவர் என்பது பெருமையாகும்.
 
தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர், தினமும் திருமண நிகழ்வுகளுக்காக பெரிய விளக்குகளை தூக்கிச் செல்லும் வேலை செய்து, தினமும் இரவு நள்ளிரவில் வீடு திரும்புவார். அப்போதும், உறங்கும் முன் இரண்டு மணி நேரமாவது படிக்க நேரம் ஒதுக்கியுள்ளார்.
 
தனது முயற்சியால் தேர்ச்சி பெற்ற ராம்கேவலை மாவட்ட நீதிபதி நேரில் பாராட்டி பரிசளித்தார். மேலும் அவரது மேல்நிலைக் கல்விக்கு ஆதரவளிப்பதாகவும் உறுதியளித்தார்.
 
இவரது தாயார் புஷ்பா கூறுகையில், “பகல் முழுக்க வேலை செய்த பிறகும், வீடு வந்ததும் என் மகன் புத்தகத்தைத் தான் முதலில் எடுப்பான்,” என்று பெருமையுடன் சொல்கிறார்.
 
கிராமத்தில் சிலர் "என்னால் தேர்ச்சி பெற முடியாது" என்று அவமதித்தாலும், அதை நிராகரிக்கதான் அதிகமாக பாடம் படித்தேன் என்கிறார் ராம்கேவல்.
 
இப்போது ராம்கேவல் கிராம மாணவர்களுக்கு ஓர் முன்மாதிரியாக மாறியுள்ளார். “எங்கள் பிள்ளைகளும் இவன் போலப் படிக்க வேண்டும்” என்று பல பெற்றோர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்