வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பரவும் செய்திகளை நம்பி, அச்சத்துடன் இருக்கும் பொதுமக்கள், அப்பாவிகளை குழந்தை கடத்தல் கும்பல் எனக்கருதி பலரை அடித்துக்கொலை செய்யும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மும்பையில் ஆடியோ என்ஜினீயராக பணிபுரியும் கவுகாத்தியை சேர்ந்த நிலோத் பால்தாசும், கோவாவில் டிஜிட்டல் நிபுணராக பணிபுரிந்து வந்த அபிஜீத் நாத் ஆகிய 2 பேர் கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதிக்கு சுற்றுலா சென்றனர்.
அப்போது கர்பி மலையில், அவர்கள் ரோட்டில் சென்ற ஒருவரிடம் வழி கேட்டுள்ளனர். இருவரையும் குழந்தை கடத்தல் கும்பல் என கருதிய அப்பகுதிவாசிகள், அவர்கள் இருவரையும் காரிலிருந்து தரதரவென இழுத்துப்போட்டு சரமாரியாக தாக்கினர்.
அந்த இளைஞர்கள் எவ்வளவு கூறியும், அதனை ஏற்க மறுத்த மக்கள், இளைஞர்களை சரமாரியாக தாக்கினர். இதில் இரண்டு இளைஞர்களுமே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் 4 பேரை கைது செய்துள்ளனர். அப்பாவி இளைஞர்களை பொதுமக்கள் அடித்துக் கொன்ற சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த அசாம் முதலமைச்சர் சர்பானந்தா கோனோவால், இதில் சம்மந்தப்பட்டோரை கைது செய்யும் படியும் சமூக வலதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார்.