கேரளாவில் தொலைக்காட்சி விவாதத்தின்போது ஏற்பட்ட மோதலில் அமைச்சர் மற்றும் வேட்பாளர் காயமடைந்தனர்.
தமிழகத்தைப் போலவே, கேரள மாநிலத்தில் மே 16 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
அங்கு, காங்கிரஸ் கூட்டணிக்கும், இடதுசாரி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், கொல்லம் அருகேயுள்ள சவரா தொகுதியில் வேட்பாளர்கள் பங்கேற்கும் விவாத நிகழ்ச்சி ஒன்றை தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்தது.
இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் கூட்டணியின் புரட்சிகர சோசலிஸ்டு கட்சி வேட்பாளரும், கேரள தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான சிபு பாபு ஜான், இடதுசாரி வேட்பாளர் விஜயன் பிள்ளை உள்பட சிலர் கலந்து கொண்டனர்.
அப்போது குடிநீர் பற்றாக்குறை தொடர்பான விவாதம் நடந்தது. அதற்கு அமைச்சர் சிபு பாபு ஜான் அளித்தார்.
அவரது பதிலைக் கேட்டு ஆத்திரம் அடைந்த சிலர் கற்களையும், நாற்காலிகளையும் தூக்கி வீசினர்.
அதில் ஒரு கல் சிபு பாபு ஜானின் கையில் பட்டது. இதனால் அவருக்குக் காயம் ஏற்பட்டது.
அதேபோல விஜயன் பிள்ளை மீது ஒரு நாற்காலி விழுந்தது. இதில் அவருக்கும் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இந்த மோதல் தொடர்பாக இரண்டு கட்சிகளின் தொண்டர்கள் மீதும், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.