முதலில் கட்சியைப் பதிவு செய்யுங்கள்; பிறகு சின்னம் தருகிறோம் – டிடிவி க்கு செக் !

Webdunia
வெள்ளி, 25 ஜனவரி 2019 (08:47 IST)
முறையாகத் தேர்தல் ஆணையத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சியைப் பதிவு செய்யாததால் பொதுவான சின்னத்தை ஒதுக்க முடியாது எனத் தேர்தல் ஆணையம் சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து அதிமுக இரண்டாக பிரிந்த போது இரட்டை இலை சின்னத்தைக் கைப்பற்றுவதில் ஈபிஎஸ் தலைமையிலான அதிமுக வுக்கும் தினகரன் தலைமையிலான அமமுக வுக்கும் இடையில் அதிகாரப் போட்டி நடைபெற்றது. பா.ஜ.க. வின் ஆதரவைப் பெற்றமையால் சின்னம் அதிமுக வுக்கு வழங்கப்பட்டது. இரட்டை சிலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீதும் வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது.

இரட்டை இலை சின்னத்தை அதிமுக விற்கு ஒதுக்கியது முறைகேடானது எனக் கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தினகரன் தொடுத்த வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது. இதற்கடுத்து ஜெயலலிதாவின் தொகுதியான ஆர் கே நகரில் நடந்த இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக நின்ற தினகரன் குக்கர் சின்னத்தில் அமோகமாக வெற்றி பெற்றார். அதனால் குக்கர் சின்னத்தையே தங்கள் கட்சியின் நிரந்தர சின்னமாக வழஙக வேண்டுமென உச்சநீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தார். ஆனால் குக்கர் சின்னத்தை தினகரனுக்கு ஒதுக்குவதற்கு அதிமுக சார்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் ’ தினகரனின் அமமுக இன்னும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படவில்லை. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாத, அங்கீகரிக்கப்படாத எந்தக் கட்சிக்கும் குறிப்பிட்ட சின்னத்தை ஒதுக்க முடியாது. எனவே டிடிவி தரப்புக்கு குக்கர் சின்னத்தை வழங்க முடியாது’ என வாதாடினார்.

தினகரனுக்கு எதிர்தரப்பான ஈபிஎஸ் தரப்பு ‘அம்மா முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகி சசிகலா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறையில் உள்ளார். மற்றொரு நிர்வாகி தினகரன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவெ அந்தக் கட்சியில் இருந்தவர்கள் எல்லாரும் எங்கள் கட்சியில் இணைந்து விட்டார்கள். எனவே அவர்களுக்கு எந்த சின்னத்தையும் ஒதுக்கக்கூடாது’ என வாதிட்டனர்.

தினகரன் தரப்பில் ‘ எங்களுக்கென்று ஒருப் பொதுவான சின்னம் இல்லாவிட்டால் நாங்கள் எப்படி அரசியல் பணி செய்வது. எனவே எங்களுக்கு என்று ஒரு பொதுவான சின்னம் ஒதுக்க வேண்டும்’ எனக் கூறப்பட்டது.

மூன்று தரப்பு வாதங்களையும் கேட்ட் நீதிபதிகள் ’அனைத்து தரப்பினரும், தங்கள் வாதங்களை எழுத்துப்பூர்வமான ஜனவரி 19 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்’ எனக் கேட்டுள்ளது.

இதனால் தினகரன் தரப்புக்கு பொதுவான சின்னம் வழங்குவதில் மீண்டும் சிக்கல் உருவாகியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலும், 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களும் நெருங்கி வருவதால் சின்னத்தைப் பெறும் பொருட்டு தினகரன் கட்சியை பதிவு செய்யும் வேலையிலும் மும்முரமாக இறங்கியுள்ளதாகட் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்