தினகரன் நிரபராதி அல்ல ; விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் - கமிஷனர் திட்டவட்டம்

வெள்ளி, 14 ஜூலை 2017 (14:45 IST)
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில், டிடிவி தினகரன் பெயரில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என டெல்லி இணை கமிஷனர் பிரவீர் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.


 

 
தேர்தல் கமிஷனால்  முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்க, டெல்லியை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர்  என்பவரிடம் தினகரன் தரப்பு ரூ.10 கோடி பேரம் பேசியதாகவும், ரூ.1.5 கோடி முன்பணமாக கொடுக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. 
 
இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் சுகேஷ் சந்திரசேகரை கைது செய்தனர். மேலும், டிடிவி தினகரன் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். அதன் பின் சென்னை வந்து தினகரனிடம் விசாரணை நடத்தினர். அதன் பின் ஏப்ரல் 26ம் தேதி தினகரனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். 42 நாட்கள் சிறைவாசத்திற்கு பின் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். 
 
இந்நிலையில், திடீர் திருப்பமாக இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையில் தினகரன் பெயர் இல்லை எனவும் போதிய ஆதரம் இல்லை என்பதால், குற்றப்பத்திரிக்கையில் தினகரனின் பெயர் டெல்லி போலீசார் சேர்க்கவில்லை என்று தெரியவந்தது. எனவே, இந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்படுவார் எனவும் செய்திகள் பரவியது. 
 
இந்நிலையில், இந்த செய்தியை டெல்லி போலீஸ் இணை கமிஷனர் பிரவீர் ரஞ்சன் மறுத்துள்ளார். இந்த வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. தற்போது இடைத்தரகர் சுகேஷ் மீது மட்டுமே நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்காக, தினகரன் குற்றமற்றவர் என கூற முடியாது. தினகரன் உட்பட நான்கு பேர் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என அவர் விளக்கம் அளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்