கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது முதலமைச்சராக இருந்தவர் உம்மன்சாண்டி.
சமீபத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தோல்வியடைந்ததால் அங்கு கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சிக்கு வந்தது. அவர், முதலமைச்சராக இருந்த போதே அவரது கார் பழுதானதால் ஆட்டோவில் சென்றார். இந்த சம்பவம் அனைத்து மாநிலத்தவராலும் பேசப்பட்டது. பின்னர், அவர் தேவாலயத்திற்கு சென்றபோது ஆலயத்தின் படியில் காலணிகளுக்கு அருக்கில் அமர்ந்தது, அனைவருக்கும் வியப்பை தந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சிக்கு சென்ற அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு மீண்டும் திருவனந்தபுரம் புறப்பட்டார். அப்போது, கட்சி நிர்வாகிகள் அவரை பேருந்து நிலையம் வரை காரில் அழைத்து வந்தனர். அங்கிருந்து கேரள அரசு பேருந்தில் ஏறி பயணிகளுடன் பயணிகளாக திருவனந்தபுரம் புறப்பட்டார். பேருந்தில் அவருடன் பயணம் செய்த பயணிகளுக்கு இந்த சம்பவம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.