உடலில் சிகப்பு நிறத்தில் ஏற்படும் கொப்புளங்கள் தக்காளி காய்ச்சல் எனப்படுகிறது. சமீபமாக இந்த காய்ச்சல் இந்தியாவில் கேரளா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. உலக அளவில் பல நாடுகளில் தக்காளி காய்ச்சல் அறிகுறிகள் பலருக்கு கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் தக்காளி வைரஸ் குறித்து பிரபல மருத்து ஆய்வு இதழான லான்செட் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி தக்காளி வைரஸ் குறிப்பாக குழந்தைகளை அதிகம் தாக்குவதாக தெரிய வந்துள்ளது. கேரளாவில் இதுவரை 82 குழந்தைகளும், ஒடிசாவில் 26 குழந்தைகளும் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவக்கூடியது என்பதால் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுகவும் அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவ நிபுணர்கள்.