பள்ளிகளில் நடக்கும் தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மாணவர்கள் சிலர் எடக்கு மடக்காக பதில் எழுதுவது என்பது பள்ளிக்கால நினைவுகளில் எல்லாராலும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். அப்படியான தேர்வுகளில் மாணவர்களுக்கு கடினமான ஒன்று உடல் பாகங்களை வரைந்து பாகம் குறிப்பது, மேப் போன்ற வினாக்கள்தான்.
சமீபத்தில் ஒரு தேர்வு தாள் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் இதயத்தை வரைந்து பாகம் குறிக்க சொல்லியிருந்தது. அதற்கு ஒரு மாணவன் இதயத்தின் படத்தை வரைந்து அதில் தனது காதலி, பிடித்த பெண்கள் பெயரை பாகமாக குறித்திருக்கிறார். அத்தோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு பெண்ணின் பெயரையும் குறிப்பிட்டு அவரை ஏன் பிடிக்கும் என்றும் கீழே விளக்கக் குறிப்பும் எழுதி வைத்துள்ளார்.
அந்த தாளை திருத்திய ஆசிரியர், 10க்கு பூஜ்ஜியம் மதிப்பெண்களை அளித்ததோடு, அதில் உனது பெற்றோரை அழைத்து வா என்றும் குறிப்பு தந்துள்ளார். இந்த தாளின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் பள்ளிக் காலங்களில் இதுபோல நடந்த நகைச்சுவை சம்பவங்களை நினைவுக் கூர்ந்து வருகின்றனர்.