வாக்குப்பதிவு இயந்திரத்தை அடித்து நொறுக்கிய எம்.எல்.ஏ.! ஆந்திராவில் பரபரப்பு..!!

Senthil Velan

புதன், 22 மே 2024 (13:18 IST)
ஆந்திராவில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த  எம்எல்ஏ ஒருவர் வாக்குப்பதிவு இயந்திரத்தை தரையில் போட்டு உடைத்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
 
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. ஆந்திராவில் உள்ள 25 தொகுதிகளுக்கு மே 13-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அன்றைய தினம் 175 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது பல இடங்களில் வன்முறை மற்றும் தகாத சம்பவங்கள் நடைபெற்றன. 
 
இந்த நிலையில், ஆந்திராவில் ஆளுங்கட்சியான ஒய்எஸ்ஆர்சிபி எம்எல்ஏ ஒருவர் வாக்குப்பதிவு இயந்திரத்தை தூக்கி தரையில் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. மச்செர்லா சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏவும், ஒய்எஸ்ஆர்சிபி தலைவர்களில் ஒருவரான பின்னெல்லி ராமகிருஷ்ண ரெட்டி தான், சிசிடிவி கேமராவில் சிக்கியுள்ளார். 

இந்த வீடியோ வைரலானதால், தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  இது தொடர்பாக தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதற்குப் பதில் அளித்துள்ள தேர்தல் ஆணையம், 7 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களை எம்எல்ஏ ரெட்டி அழித்த வீடியோ கிடைத்துள்ளது.

ALSO READ: டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல்.! வங்கி ஊழியர் கைது..!

அனைத்து வாக்குச் சாவடிகளின் வீடியோ காட்சிகளும் மாவட்ட தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. மேலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைக்கு ஆந்திர மாநில தலைமை தேர்தல் அதிகாரி முகேஷ் குமார்  உத்தரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்