தமிழகத்தில் நுழைவுத் தேர்வினை ரத்து செய்வோம்: கருணாநிதி உறுதி

Webdunia
புதன், 11 மே 2016 (06:25 IST)
தேர்தல் முடிந்து, திமுக ஆட்சிப் பொறுப்பினை ஏற்கும் பட்சத்தில், தமிழகத்தில் நுழைவுத் தேர்வினை ரத்து செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கைியில்
கூறியுள்ளதாவது:-
 
மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றில் மாணவ, மாணவியர் சேருவதற்கு நுழைவுத் தேர்வினை அனைத்து மாநிலங்களிலும் 2016ஆம் ஆண்டு முதல் நடத்தியே ஆக வேண்டுமென்று இந்திய உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
 
வசதிகள் குறைவான கிராமப் புற மாணவர்களுக்கும், நவீன வசதிகள் மிகுந்த நகர்ப் புற மாணவர்களுக்குமிடையே நிலவி வரும் வேறுபாடுகளை நீக்கவும், அனைவர்க்கும் தொழிற்கல்வியில் சமமான வாய்ப்புகளை உருவாக்கி வழங்கிட வும், சமூக நீதியை நிலைநாட்டவும், திமுக  2006ஆம் ஆண்டு ஐந்தாவது முறையாக ஆட்சிக்கு வந்தவுடன் மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட தொழிற்கல்லூரிகளில் அனுமதி பெறுவதற்குக் கட்டாயமாக அதுவரை திணிக்கப் பட்டிருந்த நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்து சட்டம் இயற்றியது. அந்தச் சட்டம் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று 7-3-2007 முதல் நடைமுறைக்கு வந்தது.
 
அதன் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒன்பதாண்டுகளாக நுழைவுத் தேர்வு எதுவும் இல்லாமலேயே தொழிற்கல்லூரி களில் இட ஒதுக்கீட்டு நடைமுறைகளை அனுசரித்து மாணவ, மாணவியர் அனுமதி பெற்று வந்தனர்.
 
நடைபெற உள்ள தமிழக சட்ட மன்றத் தேர்தல் முடிந்து, திமுக ஆட்சிப் பொறுப்பினை ஏற்குமானால், 7-3-2007 முதல் தமிழகத்தில் நுழைவுத் தேர்வினை ரத்து செய்து நடைமுறையில் இருந்து வரும் சட்டத்தின் அடிப்படையில், 21-12-2010 அன்று இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையினைத் திரும்பப் பெறவோ அல்லது திருத்தி அமைக்கவோ தேவையான ஏற்பாடுகளை போர்க்கால அவசரத்தில் மேற்கொள்ளப்படும்.
 
மேலும், தமிழகத்திலே உள்ள மாணவச் செல்வங்கள் தொடர்ந்து நுழைவுத் தேர்வு இல்லாமலே, மருத்துவக் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும், பல் மருத்துவக் கல்லூரிகளிலும் தங்களுடைய உயர் கல்வியைத் தொடருவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 
 
அடுத்த கட்டுரையில்