175 சட்டசபை தொகுதிகளும், 25 மக்களவைத் தொகுதிகளையும் கொண்ட ஆந்திரப் பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அனைத்து இடத்திலும் தனித்து போட்டியிட்டது. மக்களவைத் தேர்தலை பொறுத்துவரை பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் தெலுங்கு தேசம் 17 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 2 இடங்களிலும், பா.ஜ.க 6 இடங்களிலும் போட்டியிட்டது.
175 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட இம்மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க 88 இடங்கள் தேவை என்ற பட்சத்தில் அரசியல் கட்சியினர் போட்டியிட்டனர். அதில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி 144 இடங்களிலும், ஜனசேனா கட்சி 21 இடங்களிலும், பா.ஜ.க 10 இடங்களிலும் போட்டியிட்டன.
இந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பெரும்பான்மை தேவையான இடங்களை விட அதிகமான இடங்களில் தெலுங்கு தேசம் கட்சி 125 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அங்கு ஆட்சியில் இருக்கும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் 24 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது.
இதனால், அம்மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைக்க உள்ளதால், சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.