போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கருதப்படும், தெலுங்கு சினிமா பிரபலங்களுக்கு ஹைதராபாத் போலீசார் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள விவகாரம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கெல்வின் என்ற போதைப்பொருள் கடத்தல்காரரை சமீபத்தில் ஆந்திர போலீசார் கைது செய்தனர். அவரிடனம் நடத்தப்பட்ட சோதனையில், ஐதராபாத்திற்கு போதை பொருட்களை கடத்தி வந்து, ஒரு தரகர் மூலம் தெலுங்கு சினிமா பிரபலங்கள் சிலருக்கு சப்ளை செய்வதாக வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து, அவரது செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் உட்பட சிலரின் செல்போன் எண்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
இந்நிலையில், இது தொடர்பாக சினிமா பிரபலங்கள் 12 பேருக்கு போதைபொருள் தடுப்பு பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில், வருகிற 19ம் தேதி முதல் 28ந் தேதி வரை அவர்கள் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்த வரிசையில் நடிகர்கள் ரவிதேஜா, நவ்தீப், தருண், தனிஷ், நந்து, நடிகைகள் சார்மி, முமைத்கான், ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே.நாயுடு, இயக்குனர் பூரி ஜெகன்நாத் உள்ளிட்ட சில பெயர்கள் இருப்பதாக தெலுங்கு தொலைக்காட்சிகள் படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் நவ்தீப் “போலீசாரிடமிருந்து எனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நான் நேரில் சென்று எனது விளக்கத்தை அளிப்பேன். எனக்கு போதைப் பொருள் பழக்கம் கிடையாது. எந்த கும்பலுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை” என தெரிவித்தார்.
இந்த விவகாரம் தெலுங்கு சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.