உத்தர கன்னடா மாவட்டத்தின் கார்வார் தொகுதி எம்.எல்.ஏ-வான சதீஷ் சைல், அமலாக்கத்துறையின் பெங்களூரு மண்டல அலுவலகத்தில் விசாரிக்கப்பட்ட பிறகு, நேற்று இரவு கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஒரு நாள் அமலாக்கத்துறை காவலில் வைக்கப்பட்டார். இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மேலும் காவலில் எடுக்க அமலாக்கத்துறை கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சைல் மீது அவரது நிறுவனத்தின் மூலம் சட்டவிரோதமாக இரும்புத் தாது ஏற்றுமதி செய்து, பல கோடி ரூபாய் சம்பாதித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே சட்டவிரோத சுரங்கம் மற்றும் இரும்புத் தாதுப் போக்குவரத்து வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கைது குறித்து பேசிய கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், "எம்.எல்.ஏ சதீஷ் சைலை இப்போது கைது செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்த வழக்கு 2010 முதல் நடந்து வருகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுக்கு மட்டுமே அவர்கள் தொல்லை கொடுப்பதை உறுதி செய்கிறார்கள்" என்று கூறினார்.