இந்தியாவை தாக்க பாகிஸ்தானில் பயிற்சி?? – தமிழகத்தை சேர்ந்தவர் உட்பட இருவர் கைது!

Webdunia
ஞாயிறு, 26 பிப்ரவரி 2023 (08:58 IST)
காஷ்மீர் வழியாக பாகிஸ்தான் தப்பி சென்று பயங்கரவாத பயிற்சி மேற்கொள்ள இருந்த இருவர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் இடையே பிரிவினை காலம் தொட்டே பல பிரச்சினைகள் இருந்து வருகின்றன. காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாத கும்பல்கள் காஷ்மீரில் தொடர்ந்து அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருவதால் காஷ்மீரில் அதிகமான ராணுவ வீரர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் உள்ள இளைஞர்களை சமூக வலைதளங்கள் மூலமாக அணுகி அவர்கலை மூளைச்சலவை செய்து பயங்கரவாத செயல்களை தூண்டும் வேலைகளையும் சில பாகிஸ்தானிய பயங்கரவாத அமைப்புகள் செய்து வருகின்றன.

சமீபத்தில் அவ்வாறாக பாகிஸ்தானை சேர்ந்தவர்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட சிலர் சட்டவிரோதமாக எல்லை கடந்து பாகிஸ்தான் செல்ல உள்ளதாகவும், இதற்காக அவர்கள் டெல்லி வந்துள்ளதாகவும் டெல்லி போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி டெல்லி போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அப்போது டெல்லி செங்கோட்டையின் பின்பக்கம் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றி திரிந்த இரண்டு இளைஞர்களை போலீஸார் பிடித்துள்ளனர். விசாரணையில் ஒருவர் தமிழ்நாட்டை சேர்ந்த அப்துல் ரகுமான் என்றும், மற்றொருவர் மகாராஷ்டிராவை சேர்ந்த முபாரக் கான் என்றும் தெரியவந்துள்ளது.

காஷ்மீர் வழியாக ரகசியமாக பாகிஸ்தானிற்குள் நுழைய இவர்கள் திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த நபர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள், தோட்டாக்கள், கத்தி, கம்பியை வெட்டும் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்