சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த பியூச்சர் கேமிங் சொல்யூஷன் என்ற லாட்டரி நிறுவனம், லாட்டரி நிறுவனங்கள் மத்திய அரசுக்கு வரி செலுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிக்கிம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சிக்கிம் உயர்நீதிமன்றம், லாட்டரி என்பது அரசியல் அமைப்பின்படி மாநில பட்டியலில் உள்ள 62வது பிரிவில் வருவதாகவும், எனவே மாநில அரசு மட்டுமே வரி விதிக்க முடியும் என்றும் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை கடந்த சில ஆண்டுகளாக நடந்தது. இறுதியாக தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், சிக்கிம் உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட், மாநிலத்தால் மட்டுமே சூதாட்ட வரியை லாட்டரி நிறுவனங்களுக்கு விதிக்க முடியும் என்றும் கூறியது.
மேலும், லாட்டரி சீட்டுகளை வாங்குபவருக்கும் நிறுவனத்திற்கும் இடையிலான பரிவர்த்தனையில் மத்திய அரசு சேவை வரி விதிக்க முடியாது என்றும் கூறி, மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.